
எங்கு சென்று சொல்வதடா தமிழன் செய்யும் கூத்தினை ?
என்ன சொல்லி அழுவதடா யாம் அடைந்த வேதனை.
எங்கிருந்து வந்ததடா இப்படியோர் சிந்தனை.
இன்னொருவன் உருவம்மீது பால் சொரியும் நிந்தனை.
கண்ணகிக்குச் சிலையெடுத்தான், அது தமிழன் சாதனை.
கலிங்கம் வரை படையெடுத்தான் , அது தமிழன் போர்முனை.
மன்னுதமிழ்க் குறள் படைத்தான், அது தமிழன் நூல்வினை.
மாயைகளில் மயங்குகின்றான்... இது என்ன சோதனை ?
சித்திரத்தைத் தீட்டிவைத்து அதைத் தொழுகை புரிவதும்
சிந்தையிலா மந்தைகளாய்த் திரையினர்பால் சரிவதும்
எத்திறத்தில் செந்தமிழன் இங்கிதத்தில் சேர்ந்ததோ
எப்படித்தான் இப்படியோர் இழிவுநிலை நேர்ந்ததோ.?
நடிகர்களின் படம்காண விடியும்வரை விழிக்கிறான்.
நல்லதமிழ் படியென்றால் நாணமின்றி முழிக்கிறான்..
கொடியதிரைப் போதைதனில் அடிமையெனக் கிடக்கிறான்.
குலப் பெருமைதனைத் தமிழன் குழிதோண்டிப் புதைக்கிறான்....
-
தொ. சூசைமிக்கேல் - சவூதி அரேபியா. நன்றி : செம்பருத்தி