பொதுவாகவே கமல் படம் என்றாலே ஒவ்வொரு இண்டு இடுக்கிலும் குறை சொல்லுவதற்கு ஏதாவது கிடைக்கிறதா என்று தேடி வரிசைப்படுத்துவது என்று ஒரு பெருங்கூட்டமே கிளம்பி விடும் .மற்ற நடிகர்கள் படங்களுக்கு இந்த அளவுக்கு அவர்கள் மெனக்கெடுவதில்லை . இதிலிருந்து கமல் மட்டுமே சீரியஸாக எடுத்துகொள்ளக் கூடிய நடிகர்களில் முதன்மையானவர் என்பது தெளிவாகிறது
கமல் என்னும் நடிகனிடமிருந்து இன்னொரு 'குருதிப் புனல்'-ஐயும் கவுதமிடமிருந்து இன்னொரு 'காக்க காக்க'-வையும் பலர் எதிர் பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது . 'வேட்டையாடு விளையாடு' குருதிப்புனல் அளவுக்கு நேர்த்தியான கமல் படமல்ல .காக்க காக்க-வின் சுவடுகளை மறைக்க இயக்குநரால் முடியவில்லை தான் .தமிழில் மிகச்சிறந்த படம் என்று இப்படத்தை சொல்ல முடியாது தான் .ஆனால் போலிஸ் என்றால் 'வால்டர் வெற்றி வேல்" அல்லது சந்து முனையில் பீரில் முகம் கழுவும் "சாமி' போன்ற அரைத்த மாவுகளை தூக்கி கடாசி விட்டு இயல்பான டி.ஜி.பி ராகவனை ரசிக்கப் பழகுங்கள் தமிழ் மக்களே!
கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை .ஆனால் காட்சி அமைப்புகள் நேர்த்தி படத்தின் ஓட்டத்தை சீராக கொண்டு செல்கிறது .படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்பது பொதுவாக பலரும் கருதினாலும் ,எந்த இடத்திலும் போரடித்ததாக எனக்கு நினைவில்லை.
கமல் என்ற மகா கலைஞனுக்கு இந்த பாத்திரம் அல்வா சாப்பிடுவது மாதிரி .யானைப் பசிக்கு சோளப்பொரி! இதற்கு கமல் தேவையா? -என்று என் நண்பர் கேட்டார் .நானும் தமிழில் உள்ள மற்ற எல்லா நடிகர்களையும் ஒவ்வொருவராக இதில் பொருத்தி மனதுக்குள் நினைத்துப் பார்த்தேன் .கமலின் மகத்துவம் தெரிந்தது .40-களில் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ள டி.ஜி.பி ராகவன் பாத்திரத்துக்கு இந்த அளவுக்கு கம்பீரத்தையும் ,பண்பட்ட தோற்றத்தையும், இயல்பையும் ,ஒற்றை வரிகளில் பொட்டிலடிதாற் போல் புரிய வைக்கும் நேர்த்தியையும் வெளிக்கொணர கமலை விட்டால் வேறு யாரால் முடியும்?கமலின் முந்தைய சாதனைகளை கணக்கிலெடுத்துக் கொண்டால் அவருக்கு இந்த படம் ஒரு மைல் கல் அல்ல .ஆனால் டி.ஜி.பி ராகவன் என்ற பாத்திரம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல் தான் .மற்ற இளைய நடிகர்களுக்கு ஒரு எதிர் கால பாடம்.
இயக்குநர் கவுதமைப் பொறுத்தவரை காக்க காக்க-வை இன்னும் மறக்கவில்லை என தெரிகிறது . அது போலவே இதிலும் வில்லன் நீள தலைமுடி வைத்துக்கொண்டு ,அதே பாணியில் வசனம் பேசுகிறார் .காக்க காக்கவில் ஹீரோவின் நண்பராக வந்தவர் இதில் வில்லனாக வருகிறார் . மருத்துவம் படிக்கும் இரு வில்லன்களுக்கும் ஏன் இவ்வளவு வெறி என்பதற்கு சொல்லப்படும் காரணங்கள் போதுமானதாக இல்லை . வில்லன் முடியை முன்னால் தூக்கிப் போட்டுக்கொண்டு மரணமில்லா பெருவாழ்வு தரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் ,ஏழைகளுக்கு சேவை செய்யப்போவதாகவும் உச்சஸ்தாயில் கத்தவிட்டு என்ன சொல்ல முயல்கிறார் இயக்குநர் என்பது புரியவில்லை.
கமலினி சில நிமிடங்கள் வந்து மனதில் நிற்கிறார் .ஜோதிகா -கமல் உரையாடல் ,பின்னர் காதல் தமிழ் சினிமா வரையறைகளுக்குள் வராமல் இயல்பாக இருக்கிறது . "சாப்ட்வேரா.. இல்லைங்க..நான் போலிஸ்..ஹார்ட்வேர்" என்று சொல்லும் போது இயல்பான நகைச்சுவைக்கு தியேட்டர் அதிர்கிறது .இப்படி பல இடங்களில் கமலின் ஓரிரு வார்த்தைகள் ,டைமிங் ரசிக்க வைக்கின்றன. இன்றிலிருந்து நீயும் குழந்தையும் என் சொந்தம் என்று கமல் சொல்லும் போது ஜோதிகா உணர்ச்சிகளை அருமையாக வெளிக்காட்டியிருக்கிறார்.
தமிழில் ஓளிப்பதிவில் நான் எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம் .சேஸிங் காட்சியில் கேமராவை போட்டு தலைகீழாக புரட்டியது தவிர ,படம் முழுக்க காமிரா கவிதை படித்திருக்கிறது .
அமெரிக்க போலிஸ் அதிகாரிகளோடு உரையாடல்கள் இயல்பாக ஆங்கிலத்தில் ,தமிழ் சப்-டைட்டில்களுடன் காட்டப்படுகின்றன .ஹேராமில் இது போல தமிழில் சப் -டைட்டில் போட்டிருக்கலாம் என்று குறை சொன்னார்கள் .இப்போது தமிழ் நாட்டு மக்களுக்கு ஒன்றுமே புரியாதே ,அதனால் அமெரிக்க அதிகாரி ஜுனூன் தமிழிலேயாவது பேச விட்டிருக்கலாம் என்று குறை சொல்லுவார்கள் .அப்படியே செய்து விட்டால் அமெரிக்க அதிகாரி தமிழ் பேசுவது போல அபத்தக்காட்சிகள் கமல் படத்தில் என்று மீண்டும் குறை சொல்லுவார்கள் .
இசையைப் பொறுத்தவரை பின்னணி இசையில் குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை .பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருக்கின்றன .ஹரிஸ் ஜெயராஜைப் பொறுத்தவரை அவரின் சில பாடல்களில் தேவாலயங்களில் பாடப்படும் கிறிஸ்தவப்பாடல்களின் சாயல் இருப்பது போல எனக்குத் தோன்றும் .குறிப்பாக "பார்த்த முதல் நாளே.." பாடலில் "உன் அலாதி அன்பினில்.." எனும் போது புனித வெள்ளியன்று கோவிலில் இருப்பது போல இருக்கிறது .சின்ன வயதில் அவர் தேவாலய இசைக்குழுவில் இருந்ததால் அந்த பாதிப்பு இன்னும் மறையவில்லை போலிருக்கிறது.
குறை சொல்லுவதற்கு இந்த படத்தில் நிறைய இருக்கிறது .ஆனால் இது நிராகரிக்கத்தக்க படம் அல்ல ."சாமி' போன்ற படங்கள் 150 ஓடுமென்றால் ,இந்த படம் 300 நாள் ஓடும் தகுதியுள்ளது .தமிழ் ரசிகர்கள் இதை உணர வேண்டும்.