சமீபத்திய ஐயப்பன் கோவில் குறித்த சர்ச்சைகளிலும் ,அது தொடர்பான நம்பிக்கைகளோடு இணைந்த விவாதங்களிலும் எனக்கு கருத்து இருந்தாலும் இது வரை கலந்து கொள்ளவில்லை .ஆனால் சில அடிப்படை நிலைப்பாடுகள் குறித்த நியாயமான ஐயப்பாடுகள் எனக்கு இருப்பது மறுக்க முடியாது .அவை ஒரு வேளை என் அறியாமையினாலோ அல்லது சரியான புரிந்துணர்வின்மையாலோ தோன்றியிருக்கலாம் .ஒரு கிறிஸ்தவனான நான் இது குறித்து பொதுவில் அதுவும் வலைப்பதிவுகளில் அறிந்து கொள்ளும் முகமாக இந்த கேள்விகளை முன் வைத்தால் அது எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்ற குழப்பம் காரணாமாக நீண்ட தயக்கம் இருந்து வந்திருக்கிறது.
450 வருடகாலமாக கிறிஸ்தவர்களாக இருக்கும் ஒரு சமூகத்தில் பிறந்த நான் ,என் பிறப்பால் தான் நான் கிறிஸ்தவன் ஆனேனேயன்றி ,என் சுய தேடலின் விளைவாக நான் கிறிஸ்தவன் ஆகவில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறேன் .அதனால் ஏற்பட்ட ஒரு சிறு தெளிவில் பிற மதங்களை மரியாதையோடும் ,திறந்த மனத்தோடும் தான் நான் அணுகி வந்திருக்கிறேன் .நண்பர்கள் பலரோடு பல முறை இந்து கோவில்களுக்கு செல்ல நேரிட்ட போது ,அங்கு விபூதி வைத்துக்கொள்வதிலோ ,அல்லது என் நண்பர்கள் அர்ச்சனை செய்யும் போது என்னுடைய பெயரையும் சேர்த்துச் சொன்ன போதும் எனக்கு சிறு நெருடலோ ஏற்பட்டதில்லை .அங்கிருக்கின்ற ஆச்சார முறைமைகளுக்கு என்னால் (என் அறியாமையால்) எந்த சங்கடமும் நேர்ந்து விடக்கூடாதே என்ற எண்ணத்தால் கூடுதல் கவனம் எடுத்து மரியாதையுடன் பணிவுடனும் நடந்து கொண்டிருக்கிறேன். அந்த தகுதியின் அடிப்படையில் எனது இந்து சகோதரர்களிடம் சில விளக்கங்கள் கேட்கலாமென்றிருக்கிறேன்.இவை சமீபத்திய சர்ச்சைகளுக்கு சம்பந்தம் இல்லாத பொதுவான கேள்விகளாகவும் இருக்கலாம்.
(சில கேள்விகள் குமரன் அவர்கள் பதிவில் கேட்கப்பட்டு அவர் பதிலும் சொல்லியிருக்கிறார்)
1.பொதுவாக நான் பார்த்தவரை சைவர்கள் தயங்காமல் வைணவக் கோவில்களுக்கு செல்கிறார்கள் .ஆனால் பெரும்பான்மை வைணவர்கள் மறந்தும் கூட சைவ கோவில்களுக்குள் அடியெடுத்து வைப்பதில்லை (எனக்கு தெரிந்து சிலர் கிறிஸ்தவ கோவில்களுக்கு கூட வந்திருக்கிறார்கள் ,ஆனால் சைவக்கோவிலுக்குள் வர மறுத்து விட்டார்கள்). இது ஏன்?
2.பொதுவாக இறைவன் அன்பே உருவானவன் என்று ஏற்றுக்கொள்ளும் போது 'தெய்வக்குற்றம்' என்பது எனக்கு புரிவதில்லை .பொதுவாக 'தெய்வ குற்றம்' என்பது ஒருவன் செய்த தீவினையினால் ஏற்பட்டதாக இருந்தால் நியாயம் இருக்கிறது .உதாரணமாக ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து விட்டான் .அதனால் அது 'தெய்வ குற்றம்'ஆகி அவன் மேல் இறைவன் கோபமாக இருக்கிறார் என்றால் அது புரிந்து கொள்ளக்கூடியது .ஆனால் பொதுவாக 'தெய்வ குற்றம்' என்பது ஏதோ சடங்கு சம்பிரதாயங்களை மீறுவதாலேயே ஏற்படுவது போலவும் ,தனிப்பட்ட முறையில் இறைவனை நாம் முறைத்துக் கொள்ளுவதால் அவர் கோபப்படுவது போலவும் அதனால் 'தெய்வ குற்றம்' ஆகிவிட்டதாகவும் சொல்லுவதாகவே நான் புரிந்து கொண்டிருக்கிறேன் .ஆனால் இதற்கு சில மனதளவில் இல்லாத வெளி அடையாங்கள் மூலம் சிலவற்றை செய்யும் போது கடவுள் மனம் குளிர்ந்து தெய்வ குற்றத்தை போக்கி விடுவதாகவும் நம்பப்படுகிறதே ? இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை .இறைவன் அகத்தை விட புறத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக நிறுவுவது சரியா?
3.மாதவிடாய் என்பது இறைவனே பெண்களுக்கு படைத்துவிட்ட ஒரு உடற்கூறு .அது எப்படி தீட்டாக முடியும் ? மனிதர்களுக்கு அதனால் சில அசவுகர்யங்கள் இருக்கலாம் ,ஆனால் இறைவன் சன்னிதானத்தில் அது தீட்டாக பார்க்கப்படுவது எந்த விதத்தில் ?
4.மீரா ஜாஸ்மின் என்ற பெண் கிறிஸ்தவர் .அவர் இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட ஒரு கோவிலுக்குள் சென்று வணங்கி விடுகிறார் .ஒரு இடத்தின் புனிதத் தன்மையை பற்றிய அறிவு இல்லாமல் நடந்துகொள்ளக்கூடும் என்பதால் இத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பது தவறு ஒன்றும் இல்லை .கிறிஸ்தவ ஆலயத்தில் யாரும் சென்று வழிபடலாம் ,திருப்பலியில் கலந்துகொள்ளலாம் என்றாலும் ,திருவிருந்தில் கிறிஸ்தவர் அல்லாதவர் கலந்து கொள்வதை தவிர்க்க அறிவுற்த்தப்படுகிறார்கள் .காரணம் ..திருப்பலியில் திருவிருந்துப்பகுதி என்பது இயேசுவின் கடைசி ராவுணவு நிகழ்ச்சியை நினைவு கூறும் நிகழ்ச்சி .இயேசு அப்பத்தை பிட்டு அதனை தன் உடலாகவும் ,கிண்ணத்தில் இருக்கும் ரசத்தை தனது இரத்தமாகவும் உணர்ந்து உண்ணுமாறு தமது சீடர்களுக்கு பணித்தது போல ,குருவானவர் இயேசுவின் பிரதிநிதியாக இருக்க மக்கள் சீடர்களாக இருக்க ,அதே நிகழ்ச்சி நடத்தப்படுகிறது .எனவே அதனை உட்கொள்ளுவோர் அதன் பொருளை உணர்ந்து அதனை செய்ய வேண்டும் .அந்த சிறிய அப்பத்தில் இயேசு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு உண்ண வேண்டும் .இன்னும் சொல்லப்போனால் ஞானஸ்நானம் பெற்றவர் அனைவரும் இதை உண்பதற்கு தகுதிபடைத்தவராகி விடுவதில்லை .விபரம் அறிகிற வயதுக்கு வந்த பின்னர் இது குறித்த அறிவு புகட்டப்பட்டு ,தனிப்பயிற்சிகள் அளிக்கப்பட்டே இதில் கலந்துகொள்ள வேண்டும் ..அந்த அடிப்படையிலே தான் மற்றவர் இதன் பொருளுணராது ஏதோ அப்பம் கொடுக்கிறார்கள் என்று நினைத்துவிடக்கூடாது என்று அவர்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது .ஆனால் தப்பித்தவறி ஒருவர் தெரியாமல் அதை உண்டால் அதனால் ஒன்றும் தீட்டு கிடையாது .அப்படி நடைபெறுவது தடுக்கவும் முடியாது..அந்த வகையில் மீரா ஜாஸ்மின் செய்தது தவறு தான் .அதற்கு அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை தான் என்னை உறுத்துகிறது .10000 -ரூபாய் கட்டுவது தான் தண்டனையாம் .அதைக்கொண்டு அந்த தீட்டு நீங்க சடங்குகள் நடத்தப்படுமாம் .முதலில் 'தீட்டு' என்றால் என்ன ? 'தீட்டை களைவது' என்றால் என்ன?
(இவை எனது முதற்கட்ட சந்தேகங்கள் தான்..இதற்கு கிடைக்கும் பதில்களின் கோணம் அறிந்த பின் மற்ற கேள்விகள் கேட்கலாமென நினைக்கிறேன் ..தயவு செய்து உண்மையிலேயே நான் உளப்பூர்வமாக தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்பதாக கருதுவோர் பதிலிறுத்தால் மகிழ்ச்சியடைவேன் )